கலை இலக்கிய விமர்சன சிறு சஞ்சிகை

நான் எழுதாத முன்னுரையும் போர்ஹெசின் கவிதைகளும் (பகுதி I)

எம்.டி.முத்துக்குமாரசாமி

பகிரு

என்னுடைய “நீர் அளைதல்” கவிதைத் தொகுதி நற்றிணைப் பதிப்பக வெளியீடாக அச்சில் வெளிவரவிருக்கிறது. அத்தொகுதிக்கு ஒரு முன்னுரையை எழுதுமாறு நற்றிணைப் பதிப்பகத்தின் ஒருங்கிணைப்பாளர் யுகன் கேட்டிருந்தார். நான் பல நாட்கள் நன்றாகத் தூக்கம் போட்டேன், என் மகன்களைக் கொஞ்சி விளையாடினேன், கோடையின் வெக்கை தணிய பூமி குளிர பெய்த முதல் மழையில் விட்டேத்தியாக நனைந்தேன், இஷ்டம் போல் செவ்வாழையும் நேந்திரனும் சாப்பிட்டேன் ஆனாலும் ஒரு வரி கூட முன்னுரைக்காக என் மனதில் உதயமாகவில்லை. மெல்லிய, சிறிய முதல் கவிதைத் தொகுதி அச்சு காணப்போகும் சந்தோஷத்தில் தலை கிறுகிறுத்தது உண்மைதான் என்றாலும் முன்னுரையாக எழுத ஒன்றுமில்லை என்றே தோன்றியது. Minimalist poetryக்கு எதற்கு முன்னுரை என்று யுகனை  சம்மதிக்க வைத்தேன்; அவர் பின்னட்டை பத்தியாவது தாருங்கள் என்றவுடன் நாற்பது வயதிற்கு மேல் முதல் கவிதைத் தொகுதி வெளியிடும் நாணத்தில் முகம் சிவந்து விட்டது. ஒரு வழியாகத் தயங்கித் தயங்கி “Minimalist poetry என் ஆழ்மனத்தினை அறியும் முறைமையாக இருக்கும் என்று ‘நீர்அளைதல்’ தொகுப்பிலுள்ள கவிதைகளை எழுதிப்பார்ப்பதற்கு முன்பு எனக்குத் தெரிந்திருக்கவில்லை. குறைந்தபட்ச வெளிப்பாடு என்ற  எல்லையின்றி வேறெந்த திட்டமிடலும் இல்லாமல் எழுதிப்பார்த்தவை இந்தக் கவிதைகள்.” என்ற இரண்டு வரிகளை பின்னட்டைப் பத்திக்கு கொடுத்துவிட்டேன்.  

எழுதிப்பார்த்து ஆழ் மனதை அறிதல் என்பதில் ஒரு வகையான அறிவுத்தோற்றவியலின் அதீத கற்பிதம் (epistemological fantasy) இருக்கிறது. என் அடையாள அட்டையில் உள்ள புகைப்படத்தை வைத்து நான்தான் என்று பிறர் அறுதியிடுவது போல அல்லது புகைப்படம் எடுத்த பின்னரே, கண்ணாடியின் முன் நின்ற பின்னரே என் முகம் எனக்கு அடையாளம் ஆவது போல எழுதி முடித்த கவிதை என்னைப் முழுமையாகக் காட்டுமா? இல்லை ஏதேனுமாவது சொல்லுமா? கவித்துவ பிரக்ஞையை கவிதை வெளிப்படுத்துமா? எழுதாத முன்னுரைக்கான கேள்விகள் தொகுதி அச்சுக்குச் சென்றபின்னும் அலைக்கழித்துக் கொண்டிருந்தன. அகத்தையும், அனுபவங்களையும் பிடிப்பதற்கு மொழிக்கு இருக்கும் ஆற்றல் என்ன? மொழியின் போதாமை என்ன?

மனம் தன்போக்கில் அசைபோட்டுக் கொண்டிருக்கும் போதே போர்ஹெஸ்ஸின்⁠1 கவிதைகள் நினைவுக்கு வந்தன. மொழியின் போதாமையையே கவிதையின் பொருளாகக் கொண்ட போர்ஹெஸ்ஸின் கவிதைகளில் ஒரு அறியவொணா அடர்த்தி சேர்வதை கவனித்திருக்கிறேன். படிக்கும்போது வெகு சாதாரணமாகத் தோன்றக்கூடிய போர்ஹெஸ்ஸின் கவிதைகள் அனுபவம்-அகம்-வரலாறு-பிரபஞ்சம் என்ற தொடர்பினை   வெளிப்படுத்த மொழி போதாதிருப்பதை பல இடங்களில் சுய சுட்டுதலாகக் கொண்டிருக்கின்றன. போர்ஹெஸ்ஸின் தனித்துவமான உரைநடையும், கவிதைகளும் மொழி எந்தப் பொருளையும் பெயரிடக்கூட வல்லமையற்றது என்ற அவருடைய எண்ணத்திலிருந்தே முகிழ்த்திருக்க வேண்டும். மாறிக்கொண்டேயிருக்கும் பிரபஞ்சத்தைப் பிடிக்க இறுக்கமான மொழி போதுமானது அல்ல என்று பல சமயங்களில் அவர் எழுதுகிறார். நழுவிப்போகிற, ஒன்றன் வழித்தோன்றலாய் மற்றொன்று இருப்பதான வார்த்தைகளைப் பற்றிய புகார்களும் ஆச்சரியங்களும் போர்ஹேஸுக்கு அனேகம் உண்டு. ‘இரவின் வரலாறு’ என்ற புத்தகத்திற்கான அனுபந்தத்தில் போர்ஹெஸ் எழுதுகிறார்: “ ஸ்டீவன்சன் அறுதியிடுவது போலவே, மொழியின் பொருளாயம் அபத்தமான போதாமையையுடையது….சலித்துப் போன வார்த்தைகளையும் அவற்றின் அணி இலக்கண உபாயங்களையும் கொண்டு என்னதான் செய்ய இயலும்?”

“A Johannes Brahms”, “Juan” ஆகிய கவிதைகளில் போர்ஹெஸின் வரிகள் மொழியின் போதாமை பற்றிய அவரின் சலிப்பையும் அதனால் ஏற்படும் தேர்வையும் ஒருங்கே சொல்கின்றன.

“A Johannes Brahms” கவிதையில் ஒரு பத்தி:

“ஒரு கருத்திற்கும், ஒரு ஒலிக்கும் வழித்தோன்றலான 

தூய்மையற்ற சொல்லுக்கு என் கடப்பாடு

குறியீடல்ல, கண்ணாடியுமல்ல முனகலும் அல்ல

ஓடிக்கொண்டேயிருப்பதும் நிலைப்பதுமான ஆறு உனக்குரியது”

Juan கவிதையில் உள்ள வரிகள்:

“எந்த மனிதனிடத்தும் நான் இதை நம்பி ஒப்படைக்கலாகாது

அது எப்போதுமே நான் என்ன சொல்ல விரும்புகிறேனோ அதுவாகாது

அது தன்னுடைய பிரதிபலிப்பேயன்றி வேறெதுவுமாகாது”

மொழியினால் எதையுமே பெயரிட இயலாமல் போவதைப் பற்றியும் நைந்து போனதாகவும், துல்லியமற்றும் மொழியிருப்பதைப் பற்றியும் போர்ஹேசின் விரக்தி அவருடைய புகழ் பெற்ற கவிதைகளான The Other Tiger, The Other- the same, ஆகியவற்றிலும்கூட காணலாம். இதை மீறியும் தொடர்ந்து மொழியில் போர்ஹெஸை இயங்க வைப்பது எது?

“இரும்புக் காசு” என்ற புத்தகத்தின் அனுபந்தத்தில் கலைகளின் எல்லைகளை விவாதிக்கும் போர்ஹெஸ் நழுவும் அர்த்தங்களை மீறியும் சொற்களின் கலைக்கு ஒரு எதிர்காலம் இருக்கிறது என்கிறார். “ஒவ்வொரு பொருளும் எவ்வளவுதான் தற்காலிகமாக இருந்தாலும் அது ஒரு தனித்துவமான அழகியலால் நம்மை நிறைக்கிறது. ஒவ்வொரு சொல்லும், பல நூற்றாண்டுகளின் அர்த்த சுமைகளைத் தாங்கிக்கொண்டிருந்தாலும் ஒரு வெற்றுப் பக்கத்தைத் தொடங்குவதன் மூலம்  தன் எதிர்கால வாழ்விற்கான சமரசத்தைச் செய்கிறது”

தூய்மையற்ற மொழிக்கும் பூமியில் தன்னுடைய தற்கால இருப்பிற்கும் இடையில் ஊடாடும் கவி போர்ஹெஸ் தன் கவிதைகளில் ஒரு நிலைத்த அர்த்தத்தை உருவாக்க போராடுகிறார். நழுவி ஓடும் அர்த்தங்களை ‘எதிரொலிகளின் சுழலோட்டம்’ என்ற ஆக்டேவியா பாசின் சொற்சேர்க்கையால் அழைப்பார் தெரிதா என்பது நினைவுக்கு வருகிறது.

போர்ஹெஸின் ‘அந்த மற்ற புலி’ என்ற கவிதையிலும் சரி ‘முடிவுறா ரோஜா’ என்ற கவிதையிலும் சரி, போர்ஹெஸ் புலியும் ரோஜாவும் சொற்களாக பல நூற்றாண்டுகளாகக் கொண்டிருக்கின்ற அர்த்த சுமைகளையும், பல பொருள்த்தன்மைகளையும், அவை உருவாக்குகின்ற தொடர்புறுத்துதல்களையும் முதலில் கவனிக்க  வைக்கிறார்.  

இதற்காக போர்ஹெஸ் தன்னுடைய கவிதைகளுக்கான பாடுபொருள்களை மிகவும் நனவுபூர்வமாகத் தேர்ந்தெடுப்பதாகவே தெரிகிறது. ரோஜா, புலி ஆகியன ஏராளமான இலக்கிய, கவித்துவ தொடர்புறுத்துதல்களை உடைய சொற்கள். அவற்றின் அர்த்த சங்கிலியை எல்லையற்று நீட்ட முடியும். இந்த அர்த்த ஊடுபாவுகளின் மேல் கவனத்தைக் குவித்து அதிலிருந்து தன் தனித்துவ பார்வையை நோக்கி போர்ஹெஸின் கவிதைகள் நகர்வதால் அவை ஆழமான வசீகரத்தை கொள்வதாகின்றன.

‘முடிவுறா ரோஜா’ கவிதையில் ரோஜாவைப் பார்த்து கவி சொல்லும் பத்தியை கவனியுங்கள்:

“ஒவ்வொரு பொருளும்

முடிவற்ற பொருள்கள். நீ இசை

சொர்க்கங்கள், அரண்மனைகள், ஆறுகள், தேவதைகள்

ஆழமான ரோஜா, எல்லயற்றது, அணுக்கமானது

என்பதாகவே காட்டுவார் கடவுள் என் அவிந்த கண்களின் முன்”

தனித்துவ இருப்பிற்கும் எல்லையற்ற அர்த்த சாத்தியப்பாடுகளுக்கும் இடையில் ஊடாடி மீண்டும் தனித்துவம்  நோக்கி மீள்வதும் போர்ஹெஸின் கவிதைகளில் நிகழ்கிறது.

“அப்பாவி”என்ற கவிதையில் எல்லையின்மைக்கும் தனித்துவ இருப்பிற்குமான ஊடாட்டம் தெளிவாகவே கவிதையாகிறது:

“ஒவ்வொரு சூரியோதயமும் (அவர்கள் சொல்கிறார்கள்) அற்புதங்களை

உருவாக்குகிறது

மிகப்பிடிவாதமான அதிர்ஷ்டங்களையும் திருகி மாற்ற வல்லது;

சந்திரனையும் அளந்த மனிதக் காலடிகள் உண்டு

வருடங்களையும் பல மைல் தூரங்களையும் நாசமாக்கியதும் உண்டு

நீலத்தில் காத்திருக்கின்றன பொதுவெளியின் துர்க்கனவுகள்

அவை நாளினை இருளடையவைக்கின்றன. அந்த வெளியில் அங்கே ஏதுமில்லை,வேறொன்றானதும், மாறுபட்டதும் ஏதுமில்லை

மிக எளியவை மட்டுமே என்னை அங்கே தொந்திரவு செய்கின்றன

என் கை நிச்சயமான ஒரு பொருளாக இருக்கலாம் என்பது என்னை ஆச்சரியப்படுத்துகிறது

கிரேக்கத்தின் உடனடியான எலேயா நகர்சார் அம்பு அது அடையமுடியாத இலக்கினை அடைவதில்லை என்பது என்னை ஆச்சரியப்படுத்துகிறது

குரூரமான வாள் அழகாய் இருக்ககூடுமென்பது என்னை ஆச்சரியப்படுத்துகிறது 

அவ்வாறே ரோஜாவுக்கு ஒரு ரோஜாவின் மணம் இருக்கலாம் என்பதும்”

தன்னை அப்பாவியாக வெகுளியாகக் கருதிக்கொள்ளும் குரலில் இந்தக் கவிதை எழுதப்பட்டிருக்கிறது என்பது தவிர அப்பாவித்தனம், வெகுளித்தனம் என்பதற்கும் இந்தக் கவிதையின் சிந்தனைபோக்கிற்கும் எந்த சம்பந்தமும் இருப்பதாகத் தெரியவில்லை!  ஸ்பானிஷ் மூலத்தில் படித்து இந்தக் கவிதையைப் பற்றி எழுதியுள்ள விமர்சகர்கள் அபாரமான லயத்துடன் எழுதப்பட்ட இந்தக் கவிதை வியத்தல் படைப்பூக்கத்தின் அடிப்படையாக இருக்கும் பட்சத்தில் வெளிப்படையாக நன்றாகத் தெரிந்த விஷயங்களைப் பற்றி கூட ஆச்சரியப்பட்டுக் கொண்டிருக்கலாமே என்ற பட்டியலை கவிதையின் இரண்டாம் பகுதியில் வைத்திருப்பதன் மூலம் முதல் பகுதியில் சொல்லப்பட்ட ‘அவர்கள் சொல்லும் ஆச்சரியங்களை’ கேலிக்குள்ளாக்குகிறது  என்கிறார்கள். இந்தக் கவிதையிலும் கூட போர்ஹெஸுக்குப் பிடித்தமான கருப்பொருள்களான மொழியின் போதாமை, சாதாரணமாகப் புழங்கும் சொற்களின் மேலும் பொருட்களின் மேலும் ஏற்றப்பட்டுள்ள அர்த்த சுமைகள் முடிவின்மையை தரிசிக்க தடையாயிருப்பது சுட்டப்படுவதை அவதானிக்கலாம். 

கடந்த இருபத்தைந்து வருடங்களில் பல்வேறு சமயங்களில் போர்ஹெசின் கவிதைகளை திரும்பத் திரும்ப வாசித்திருக்கிறேன். அவைகளுக்கு அவ்வபோது நான் எழுதிவைத்த குறிப்புகளைப் படித்து  மேற்கண்டவாறு எனக்காகத் தொகுத்துக்கொள்ளும்போது கவிதையைப் பற்றி கவிதையாலல்லாமல் பேசமுடியாதோ என்று தோன்றுகிறது. அதனால்தான் என் கவிதைத் தொகுதிக்கு நான் முன்னுரை எழுத இயவில்லையோ? 

எனக்குப் பிடித்த மற்ற கவிஞர்கள் எல்லோரையும் விட போர்ஹெஸின் கவிதைகளையே நான் அதிகம் முறைகள் பல்வேறு சந்தர்ப்பங்களில் வாசித்திருக்கிறேன். ஆனாலும் மொழியின் போதாமை, நழுவிச் செல்லும் அர்த்தங்கள், நூற்றாண்டுகளின் அர்த்த சுமையைத் தாங்கும் சொற்கள் ஆகவே நனவு பூர்வமாக கவிதையை எழுதுவதன் தேவை ஆகியவை கவிதை எழுதிப்பார்க்கும் என் முயற்சியினை பாதிக்கவேயில்லை. மாறாக நனவற்ற நிலையில், அலங்காரமற்ற, மிகையுணர்ச்சிகள் அற்ற  எளிய சொற்களின் முயங்குதலில் ஒரு ரசவாதம் ஏற்பட்டு அழகு மின்னலென பற்றாதா என்று தேடிப்பார்த்திருக்கிறேன். 

இந்தத் தேடலில் போர்ஹெஸின் வேறு சில கவிதைகள் என்னை பாதித்திருக்கக்கூடும். குறிப்பாக “ப்ரௌனிங் கவியாக உறுதிபூண்டார்” என்ற கவிதை. கவிதையின் முழு மொழிபெயர்ப்பையும் தருவதற்கு முன் ராபர்ட் ப்ரௌனிங் கவிதைகளுக்கும் என் அக உலகுக்கும் உள்ள தொடர்புகள் பற்றி சில வார்த்தைகள்.

என் தந்தைக்கு ப்ரௌனிங் கவிதைகள் மிகவும் பிடிக்குமென்பது என் அனுமானம். எனக்கு அவர் அன்பளித்த புத்தகங்கள் எல்லாவற்றிலும் ப்ரௌனிங்கின் கவிதை மேற்கோள்களையே  எழுதி கையெழுத்திட்டுத் தந்திருக்கிறார்.  புத்தகப்புழுவான அம்மாவுக்கும் அப்பாவின் ப்ரௌனிங் மேற்கோள்கள் ஆச்சரியத்தையே தரும். எல்லாம் இண்டெர்மீடியெட் கோட் அடித்து கோட் அடித்து படித்தபோது உருப் போட்டது இப்பொழுது எதுவும் படித்ததில்லையாக்கும் என்பார் அம்மா. அப்பா அதற்கு எதுவும் பதில் சொன்னதாக நினைவில்லை. அவர் ஒரு ரகசிய கவிதை வாசகர் என்று எனக்கு மட்டுமாக நான் துப்புத் துலக்கிவைத்திருந்தேன். கல்லூரியில் ப்ரௌனிங் பாடப்புத்தகக் கவிஞர் என்பதால் அவ்வளவாக ஈடுபாடு ஏற்படவில்லை.  அப்பாவிடம் போர்ஹெஸுக்குப் பிடித்த கவிஞர்களில் ப்ரௌனிங்கும் டென்னிசனும் உண்டு என்று உற்சாகமாக ஒரு முறை சொல்லி அவருடைய ரகசிய வாசிப்பு உலகத்தைத் திறக்க வைத்தேன். ப்ரௌனிங் ஒரு மேஜிஷியன் என்றார் அப்பா.

ப்ரௌனிங் கவியாக உறுதிபூண்டார்

லண்டனின் சிவப்புச் சுழல் வழி பாதைகளில்

நான் விசித்திரத்திலும் விசித்திரமான அழைப்பினை

தேர்ந்தெடுத்துள்ளேன்

எந்த அழைப்புமே விசித்திரம்தான் என்றாலும் கூட

தத்துவவாதியின் கல்லினை

பாதரசத்தில் தேடிய ரசவாதியைப் போல

தினசரி வார்த்தைகளையெல்லாம்—

சூதாடியின் குறியிடப்பட்ட சீட்டுக்களாக, சாதாரண காசாக-

தோர்⁠2 அவற்றின் கடவுளாகவும் சத்தமாகவும்

இடியாகவும் பிரார்த்தனையாகவும் இருந்தபோது

அவை கொண்டிருந்த மாயாஜாலம் அனைத்தையும்

வெளியிட வைப்பேன்

இன்றைய மொழியில் சொல்வதானால்

என் பாணியில் நான் சொல்வேன் நிரந்தர பொருட்களை;

மகத்துவமிக்க பைரனின் எதிரொலியாய்

தகுதி பெற முயற்சிப்பேன்

இந்தத் தூசியாகிய நான்

ஒரு பெண் காதலைப் பகிர்ந்தால்

காயப்படுத்தமுடியாதவனாயிருப்பேன்

என் பா வட்டத்துள் வட்டமாய் சுழலும் சொர்க்கங்களின் 

பத்தாவது வெளியைத் தொடும்

ஒரு பெண் என் காதலை நிராகரிப்பாளென்றால்

அந்தத் துயரத்தை இசையாக்கி

காலத்தின் நிறைந்த ஆற்றில் ஒலித்துச் செல்ல வைப்பேன்

என்னையே நான் மறந்தபடியே வாழ்வேன்

லேசாகப் பார்த்து உடனே மறக்கும் முகமாவேன்

காட்டிக்கொடுப்பவனாய் இருக்க வேண்டிய யூதாசின்

தெய்வீகக் கடமையைச் செய்வேன்

தன் சகதியில் உழலும் காலிபானாய்⁠3 இருப்பேன்

பயமற்றும் நம்பிக்கையற்றும் சாகும்

கூலிக் கொலையாளியாவேன்

விதி திருப்பி அனுப்பிய முத்திரையை

பெரும் ஆச்சரியத்துடன் பார்க்கும்

பாலிக்ரேட்டீஸ்⁠4 ஆவேன்

நானே என்னை வெறுக்கும் நண்பனாவேன்

அந்தப் பெர்ஷியன் எனக்கு வானம்பாடியைத் தருவான் ரோம் எனக்கு வாளினைத்தரும்

முகமூடிகள், துயரங்கள், உயிர்த்தெழல்கள்

என் வாழ்வை நெய்தும் அவிழ்த்துமிருக்கக்

காலப்போக்கில் நான் ராபர்ட் ப்ரௌனிங் ஆவேன்

அடிக்குறிப்புகள்
  1. Jorge Luis Borges ஐ தமிழில் ஹோர்ஹே லூயீஸ் போர்ஹெஸ் என்று எழுதவேண்டும் பார்க்க: http://inogolo.com/pronunciation/d1055/Jorge_Luis_Borges
  2. Thor ஸ்கேண்டிநேவிய புராணங்களில் குறிப்பிடப்படும் இடி மழை கடவுள்
  3. ஷேக்ஸ்பியரின் Tempest  நாடகத்தில் தனித்தீவில் வாழும் காட்டுமிராண்டி கதாபாத்திரத்தின் பெயர் காலிபான்
  4. Polycrates see http://en.wikipedia.org/wiki/Polycrates

குறிச்சொற்கள்

மேல் செல்