கவிதைக்கான வாசிப்பு பயிற்சியென்பது தமிழ் சூழலில் பெரும்பான்மையும் ரகசிய செயல்பாடுதான். பயிற்சி என்பதே அந்நியமாகத் தோன்றும் அளவுக்கு அது மழுங்கடிக்கப்பட்டிருக்கிறது. அதிகம் புழங்கும் வடிவமாகவும் அதே அளவுக்கு நிராகரிக்கப்படும் வடிவமாகவும் கவிதை இருக்கிறது. கவிதை சார்ந்த ஒருவித செவ்வியல் வாசிப்பும், கொஞ்சம் நிதானமான ரொமாண்டிக் வகைமைகள் மட்டுமே தொடர்ந்து முன்னிறுத்தப்பட்டும் படைக்கப்பட்டும் வருகிறது.
கவிதை தளத்திற்கான சரியான விமர்சனங்கள் மற்றும் செறிவான கட்டுரைகளில் நிலவும் போதாமை ஆகியவை காரணமாகக் கவிதை வடிவத்தில் ஆர்வம் கொள்ளும் புது வாசகனும் மேலோட்டமான கவிதைகளுடன் மட்டுமே நின்றுவிட வேண்டியிருக்கிறது. பின்நவீனத்துவம் போன்ற அறிவுசார்ந்த சொல்லாடல்கள் பரிச்சயமாகி இருபது ஆண்டுகள் கழிந்தும் இத்தகைய நிலைமை நிலவுவது தமிழின் துரதிர்ஷ்டமே.
இந்தப் பிரச்னைகளில் கவனம் செலுத்தினால் இதில் பலவித முரண்கள் இருப்பதைக் காணலாம். தொண்ணூறுகளில் கவிதைகளின் மடை மாற்றத்திற்கும் அவற்றின் புதிய திறப்புக்கும் பங்காற்றிய முன்னோடிளுமே இன்றைய சூழலின் தட்டையான தன்மைக்கு மௌன சாட்சியமாக நிற்பது இதில் முதல் முரணாகும். ஆனால் தொடர்ந்து முன்னோடியான வடிவங்களைப் படைப்பதும் புதிய சோதனைகளை மேற்கொள்வதுமாக இந்த முன்னவர்கள் எப்போதும் தனது படைப்பூக்கத்தில் ஒரு அந்தரங்கத்தைப் பேணுவதின் வழியாகத் தக்கவைத்துக்கொள்கின்றனர். பலர் இதில் தவறி சூழலின் ஊக்கமற்ற தன்மைக்கு இரையாகவும் நேர்கிறது.
சுதந்திர தன்மையை உறுதிசெய்யவே ஒவ்வொரு இலக்கிய வடிவமும் முயலும்போது அதன் பல்வேறு சாத்தியங்களுடன் தனது அனுபவத்தையும் சரிவிகிதமாகச் சேர்ப்பித்துவிடும் படைப்பாளன் எப்போதும் மைல் கல்லாக இலங்குகிறான். ஆனால் அவனை அடியொற்றியே அந்த வகைமையின் அதிகச் சாத்தியங்கள் குறுகிய அளவில் ஒடுக்கப்படுவதும் அரங்கேறி விடுகிறது.
தமிழில் தேவதேவன், தேவதச்சன், பிரமிள், ரமேஷ் பிரேம் இவர்களை வழிமொழிவதன் மூலம் கவிதைச் சூழலில் இத்தகைய ஒரு தேக்கமே நிலவுகிறது. வகைமை ரீதியாக நிலவும் இந்தச் சிக்கலே ஒரு படைப்பாளரை சூழலில் எடுத்துக்கொள்வதும் பிறிதொருவர் மீதான பாராமுகமுமாகத் தொடர வாய்ப்பளிக்கிறது. இதனாலேயே தொடர்ந்து குறிப்பிடத்தக்க படைப்பாளர்கள் அதிகபட்ச சாத்தியமாக தொகுப்பு வெளியிடுவதுடன் சுருங்கிக்கொள்ள வேண்டியிருக்கிறது.
புதிய படைப்பாளர்கள் புதிய உத்திகளுடன் படைப்புச் சூழலுக்கு அறிமுகமாக நேர்ந்தாலும் அவர்களுக்கான அங்கீகாரம் இலக்கியம் தவிர்த்த புறச்செயல்பாடுகளினாலேயே விளைவதாக இருக்கிறது. வாசிப்பின் பொது மந்த தன்மையினால் படைப்பின் சாத்தியங்களை விரிவாக்கம் செய்யும் படைப்பாளர் இருட்டடிப்பு செய்யப்படுவது ஆரோக்யமான இலக்கியச் செயல்பாடுக்கு எதிராகவே முடிகிறது.
கவிதைகளின் சாத்தியப்பாடுகளில் இன்றைய நூற்றாண்டின் பல்வேறு உளச்சிக்கல்களை எழுதவும் கவிதைகளின் நுண்மையான அலகுகளைத் தோற்றுவிக்கவும் சில படைப்பாளர்கள் வாசிக்கக் கிடைக்கிறார்கள். இவர்களை மையப்படுத்துவதன் மூலம் படைப்பின் பாசாங்கற்ற தன்மை ஓரளவுக்கேனும் அடுத்தத் தலைமுறைக்குக் கடத்தப்படுமென நம்புகிறேன்.
ஜீவன்பென்னி, பெரு.விஷ்ணுகுமார், செல்வசங்கரன், பா.ராஜா, ரா. செயராமன் என்று சட்டென நினைவுக்கு வரும் சில படைப்பாளர்களை இப்போதைக்குக் கூறலாம். படைப்பு என்ற ஒற்றைச் செயல்பாடு தவிர்த்து இவர்களின் புறச்செயல்பாடுகளில் கருத்து வேற்றுமைகள் உண்டு எனினும் இலக்கியத்திற்குப் பொது அலகான படைப்பூக்கம் என்ற அளவில் இவர்களை முன் மொழிகிறேன்.
ஜீவன்பென்னி குறைந்தது பத்து ஆண்டுகளாகச் சிறுபத்திரிக்கைச் சூழலில் இயங்கி வருகிறார். புதுஎழுத்து வெளியீடாகக் கொண்டுவரப்பட்ட இவரது முதல் தொகுப்பு பெரிய அளவில் வெளிதெரியவில்லை. மணல்வீடு சார்பில் ‘அளவில் சிறியவை அக்கறுப்பு மீன்கள்’ வெளியானது. கவிதைகளுக்கேயுரிய மென் உணர்வுகளைச் சுற்றிப் பின்னப்பட்ட ஒரு உலகம் என்றாலும் அவற்றுள் பெருமளவு மாறுதல்களை முயன்றிருக்கிறார்.
சாயல்களைக் களைந்துவிட்டு தனது தனித்த பாணியினை இடம்பெறச் செய்யும் அவரது முனைப்புகள் அவருக்கான படைப்புவெளியினைச் சாத்தியப்படுத்துகின்றன. அதில் சுதந்திரமாகவும் கவனத்துடன் பயணிக்கின்றன ஜீவன்பென்னி கவிதைகள். தொடர்பு சாதனங்களின் அளப்பரிய சந்தைப் பெருக்கத்தால் அந்தரங்க உறவுகளில் ஏற்படும் நிச்சயமின்மையையும் அதன் நெருக்கடிகளையும் கவித்துவமாகக் கையாள்வது இவரது பாணியாகும்.
கவிஞர் பெருந்தேவி வேறு புனைபெயரில் ‘பொன்கொன்றை பூக்கவந்த பேய் மழை’ தொகுப்பைக் கொணர்ந்த போது சில மூத்த கவிஞர்கள் தமிழில் ‘ரொமாண்டிக்’ கவிதைகள் அருகிவிட்ட நிலையில் இத்தொகுப்பு மகிழ்ச்சியளிப்பதாகப் பேசி வந்தனர். அவர்களுள் சிலருக்கு கண்டிப்பாக ஜீவன்பென்னியின் பெயர் பரிச்சயமானதாகவே இருந்திருக்கக்கூடும். ஆனாலும் இப்படியொரு கருத்தை உதிர்த்தனர்.
கவிதை என்றாலே தவறாமல் இடம்பெறும் பூக்கள், செடிகள், மரம் போன்ற மெல்லிய உணர்வின் குறியீடுகளை அலுக்காமல் வாசிக்க முடியுமென்றால் அது ஜீவன்பென்னி கவிதைகளிலேயே சாத்தியமாகக்கூடிய ஒன்றாக இருக்கிறது. அதேசமயம் தத்துவ விசாரம் கொண்டாதாகவும் அன்பிற்கான உணர்வுகளின் தவிப்பையும் அதன் தோல்விகளையும் அடையாளப்படுத்துவதாகவும் ஜீவன் பென்னியை இனங்காணலாம்.
ஜீவன்பென்னியை உளமாற வாசிக்கும் எவரேனும் இருந்திருக்கக்கூடுமானால் பென்னியின் தொகுப்பு வெளிவந்த போதே அவரது கவிதைகள் குறித்துப் பொதுவெளியில் பேசியிருக்கலாம். ஆனால் அதற்கு முன் வெளியான அவரது சுமாரான கவிதைகள்தான் வெளி ரங்கராஜனால் பேசப்பட்டது பிறராலும் கொண்டாடப்படுகிறது. இத்தகைய தவறான முன்னுதாரணங்களைப் படைப்பாளர் ஏற்றுக்கொள்ளாமல் இருப்பது நலம். பென்னியின் மூன்று தொகுப்புக்குப்பின்னான சமீபத்திய கவிதையின் ஒரு பகுதி பின்வருமாறு:
ஒரு புதிய தினத்தில் நாமெல்லோரும் அவனை மறந்துவிட்டிருந்தோம்
அந்த இருப்புப்பாதையின் நடுவில் ஒவ்வொரு கட்டையையும்
எண்ணிக்கொண்டே வந்து கொண்டிருந்தவன்
சத்தமிடும் ரயிலொன்றைப் பொருட்படுத்தாமல் அதற்குள் நுழைந்துவிட்டான்
எந்தப் பெரிய இயந்திரமும் உணர்வுகளை நெருங்கிப் படித்ததில்லை.
ஒருவரை மறப்பதை புதிய தினத்தில் இருந்து தொடங்குவது பென்னியின் கவிதையுணர்வைக் காட்டுகிறது. பொதுவாக மறப்பதை சோகத்தில் இருந்தே தொடங்கும் பாணிக்கு எதிரானது இது. ரயிலில் விழுவதற்குப் பதிலாக அதற்குள் நுழைவதைக் கவனித்தால் இக்கவிதையை இன்னும் நெருக்கமாக உணரலாம். இறுதிவரி மிகவும் முக்கியமானது ‘எந்தப் பெரிய இயந்திரமும் உணர்வுகளை நெருங்கிப் படித்ததில்லை’.
இயந்திரங்களற்ற வாழ்வை கனவிலேனும் காணும் சாத்தியமற்ற கோளாகவே பூமியானது மாறிவிட்டது. அத்தகைய அஃறினைப் பெருக்கத்தில் மனித உணர்வுகள் காவு வாங்கப்படுவதை எளிதாகச்சொல்கிறது கவிதை. அன்பு என்ற சொல் அப்படியே இடம்பெறாவிட்டாலும் இதயம் முழுக்க அதனை ஊற்றெடுக்கச்செய்கிறது. தன்னைச்சுற்றிய நூற்றாண்டின் இறுக்கத்தையும், அழுத்தத்தையும் உணர்ந்த அறிதலிலிருந்து அறியாமையைப் புனையும்போது கவிதை வாசகனை அவனுடைய அறிதலுக்கு இட்டுச்செல்கிறது.
நெருங்கிய பந்தங்களில் நியாயங்களே இல்லாமல் பழிவாங்கப்படும் எந்தக் கவிதை வாசகனும் பென்னியை நெருக்கமாக உணர முடியும். அதுதான் அவரின் படைப்பூக்கம்.
விஷ்ணுகுமாரையும், செல்வசங்கரனையும் எடுத்துக்கொண்டால் இருவர் சந்திக்கும் பிரச்சனையும் ஏறத்தாழ ஒரே மாதிரியானதெனத் தோன்றுகிறது. ஆனால் கவிதையாக்கத்தில் இருவரும் வெவ்வேறு திசைவழியைச் சார்ந்தவர்கள் என்பது வேறுவிஷயம். கவிதை செயல்கிரமத்தில் மேம்போக்கான விளையாட்டுத் தன்மையுடன் இயங்குவதாக இவர்கள் மீதான விமர்சனம் வைக்கப்படுகிறது.
படைப்பாளர்களின் நெருக்கம், தொடர்பு காரணமாகச் சூழலில் இந்த விமர்சனத்தை மட்டுப்படுத்தினாலும் பொதுவான வாசகனுக்கு இவர்களை அணுகுவதற்கான எந்த வழிமுறையும் இருக்காதென்பதை கவனிக்க வேண்டும். ஆனால் கவிதைகளின் தற்கால வகைமையினையும் போக்கினையும் பரிச்சயம் செய்துகொள்ளும் வாசகன் அல்லது இளம் படைப்பாளனுக்கு இவர்களை அவதானிப்பது புதிய ஊற்றினைத் திறக்குமென நம்புகிறேன்.
கவிதையின் தாராளப் பண்பை வெவ்வேறு வகைகளில் நிரூபிக்கும் படைப்பாளர்களில் இவர்களுக்கு ஒரு இடம் உண்டு. கவிதையாக்கத்தின் தொய்வடைந்த போக்கினை மறுத்தும் அதற்கும் எதிராகவும் கவிதை புனைவதும் தொடர்ந்து அந்தத் திசையில் பயணிப்பதுமாக ஒரு செயலூக்கத்தினை இவர்கள் படைப்புகளில் உணரலாம்.
மொழிசார்ந்து கட்டமைக்கப்படும் கருத்தாக்கத்தினைக் கவிதைகள் மூலம் நிராகரிப்பதால் இவர்கள் மீதான உரையாடல் என்பது பொது வாசகனை அடைய முடியாத ஒன்றாகவே இருக்கும் படியாகிறது. தன் மறுப்பையும் விலகலையும் இயக்கத்தையும் இருவரும் படைப்பின் வழியாகவே செய்கிறார்கள்.
மொழி மீதான பிரமையிலிருந்து கவிதையின் பாடுபொருளுக்கும் வடிவத்திற்கும் வாசிப்பை நகர்த்தியிருப்பது இவர்களின் குறிப்பிடதக்க பங்களிப்பாகும். இவர்களை அடியொற்றி மேற்கொண்டு விவாதங்களைத் தொடர்வதன் மூலம் கவிதை தளத்தில் மேலும் சில புத்தாக்கங்களைச் சாத்தியப்படுத்த இயலலாம்.
விகித அளவில் முன்பின் இருந்தாலும் இருவரும் கவிதையை மொழி அழகியல் என்னும் சிறிய சிமிழுக்குள் அடைக்காமல் அதன் எல்லைகளை மேலும் மேலும் விரித்துச்செல்பவர்கள். பழக்கங்களின் தொகுதியாகவே நடைபெறும் மனிதனின் இயங்குதலில் நிரம்பியிருக்கும் பொய்மைகளையும் பாசாங்குகளையும் கவிதையின் பொருண்மையாகப் புழங்குவது செல்வசங்கரனின் படைப்புலகம். அவரின் சமீபத்திய கவிதை பின்வருமாறு:
கூ……
கூ…வென்று கேட்ட ரயிலின் சத்தத்தை எடுத்து காது குடைந்தேன்
பெரிய சத்தம் அது
தலை அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் நெளிந்தது
ரயிலில் விழுந்து இறந்த ஒருவர் திடீரெனக் காதிலிருந்து வந்து விழுந்தார்
அவர் சொன்னார்
அந்தச் சத்தம் என்னைக் காப்பாற்றவே இல்லை
அதை ஏன் எடுத்தாய் கீழே போடு என்றார்
அவரே எழுந்து வந்து என் காதுகளிலிருந்து அந்தச் சத்தத்தை
உருவி எடுத்தார்
தண்டவாளத்தின் சொருகு கம்பியை எடுத்துக் கொண்டு
சில சிறுவர்கள் வெளியேறி ஓடினர்
கொய கொயவெனப் பாம்புக் குஞ்சுகள் விழுந்தன
ஆயிருக்கும் போது எழுந்து நின்ற அநேகப் பேர்கள் வந்தனர்
பழுதாகி நின்ற ஒரு ரயிலே கையில் வந்தது
சிறு பிராயத்தில் ரயிலை ஒட்டிய வீட்டிலிருந்தோம்
அதனால் தான் இவ்வாறு ஆகிவிட்டது
மன்னித்துவிடுங்கள் என்றேன்
அவ்வளவு பெரிய சத்தம்
தன்னைக் காப்பாற்றவில்லையேயென்ற வருத்தத்தில்
இறந்து போனவர்
பழைய இடத்தில் பழைய மாதிரியே படுத்து இறந்தார்
தன்னைச் சுற்றிய அழகியலை முதன்மைப்படுத்தும் தன்மைக்கு எதிராகக் கவிதையின் விசை செயல்படுகின்றது. எங்கும் வாசகனின் மென்மையான உணர்வுகளுக்கு இரை போடும் வழிமுறையையும் நிராகரிக்கிறது. கவிதைக்கான பொதுமையான பாடுபொருளை கடக்கக் கேட்கிறது. வாழ்மானத்தின் ஏதோ ஒரு பகுதியில் தனிப்பட்ட ஒவ்வொருவரும் சந்தித்திருக்கக்கூடிய ஒன்றே பொதிந்திருக்கக் கூடுமானாலும் வாசிப்பனுபவத்தில் கூடுதலான மெனக்கெடலை கோருகிறது.
அது இயலாத போது இது கவிதையே இல்லை என்ற முடிவுக்கு வர விமர்சகர்களும் வாசகர்களும் தயங்குவதில்லை. சப்தத்தைத் திடப்பொருளாகப் பாவிக்கச் செய்கிறார். அந்தச் சப்தம் என்னைக் காப்பாற்றவே இல்லை எனச் சப்தத்தைக் கொண்டு காது குடையும் போது விழுந்த மனிதன் கூறுகிறான். ஒரு மனிதனின் அங்கலாய்ப்புகள் அவனுக்குச் சமயங்களில் கைகொடுக்காமல் போவதையோ அல்லது காப்பாற்றுவதற்காகவே உருவாக்கப்பட்ட ஒரு வழிமுறை அதைச் சரியாகச் செய்வதில்லை என்ற விமர்சனமாகவோ இந்தக் காட்சியை ஒரு வாசகன் உருவகப்படுத்தலாம்.
கவிதையின் பல கோணங்களில் இது ஒரு சிறிய சாத்தியம் மட்டுமே. வரிகளின் மூலம் மட்டுமே அர்த்தங்களை ஊட்டக்கேட்கும் வாசிப்பை செல்வசங்கரன் கவிதைகளில் தொடர்ந்து அழிக்க முயல்கிறார். கவிதையின் மலினத் தன்மையிலிருந்து தன் படைப்புலகை காப்பாற்றவும் அதன் நெடிய பயணத்தில் சிறிய விளக்காக ஒளிரவும் அவருக்கு இது கைகொடுக்கிறது. முக்கியமாகத் தனது சுயத்தை மட்டுமே படைப்பாகத் தருகிறார்.
புரிந்துகொள்ளப்படுதல் என்பதிலிருந்து வாசகருக்குள் வினையாற்றுதல் என்னுமிடத்தையே அவர் கவிதைகள் அடைய முயல்கின்றன. விஷ்ணுவின் கவிதைகளிலும் இத்தகைய பண்புகள் நிரம்பியிருப்பதைக் காணலாம். என்றாலும் தற்போது விஷ்ணு கவிதையை மீண்டும் மொழி அழகியல், மெய்யியல், இறைமை போன்ற தூய்மைவாதக் கோட்பாடுகளுக்குள் அடக்கிவிடக்கூடுமோ என்ற அச்சம் மெல்ல முகிழ்க்கிறது.
இவர்களைக் காட்டிலும் ரா.செயராமனின் பங்களிப்பென்பது அளப்பரியது. முழுக்க முழுக்கத் தகிக்கும் பாலியல் ஏக்கமும் தனது அறத்தின் மீதான சந்தேகங்களும் நியாயங்கள் பிசகும் சிறு கணங்களையும் இவ்வளவு துல்லிதமாகக் கவிதையில் கையாள முடியுமெனப் பிரமிக்கச்செய்தவர் ரா.செயராமன். தொடர்ந்து கவிதையின் ஆஸ்தான ஆளுமைகளாக மொழியப்படும் கவிஞர்களிலிருந்து பெரிதும் வேறுபட்டவர்.
படைப்பாளனுக்கான முக்கியப் பண்பான பொதுநீரோட்டத்தில் ‘கலவாமை’ என்பது சரியாகப் பொருந்தக்கூடிய நபராக ரா.செயராமனைக் காணலாம். மூன்று கவிதை தொகுப்புகள் வெளியாகியும் அவை பரவலாகச் சென்றடையவில்லை. பேரா. க.பஞ்சாங்கம் அவர்களின் கட்டுரை ஒன்று மட்டும் மணல்வீடு இதழில் பிரசுரமானது.
அதனை வாசித்த ரசிகமணிகளுக்கும் திருப்பி அதனைத் தேடி வாசிக்கும் ஆர்வம் உண்டாகாது போனது ஆச்சர்யமில்லைதான். பல்கலைக்கழகமொன்றின் தமிழ்த்துறை தலைவராகப் பணியாற்றியும் தனது படைப்புகள் போற்றப்படுவதற்கான சந்தைப்படுத்துதல் நடவடிக்கை எவற்றிலும் ஈடுபடாதது மூலமே இலக்கியச்சூழல் குறித்த இவரின் அவதானிப்பை புரிந்துகொள்ள முடிகிறது. படைப்புச்சார்ந்து மட்டுமல்லாது ஆய்வுப்புலம் சார்ந்து இவர் மேற்கொண்ட ஆய்வுப்பணிகளும் உரிய வெளிச்சம் பெறவில்லை என்பது தனி விஷயம்.
தனிமையும் ஏக்கமும் நிரம்பிய இவரது படைப்புலகை பரிச்சயம் செய்துகொள்ள முடியுமானால் தனிமை குறித்து எழுதுவதின் வறட்சியை ஒரு இளம் படைப்பாளன் புரிந்துகொள்ள இயலும். வடிவம் குறித்த அக்கறையையும் சொல் தேர்வில் நிபுணத்துவத்தை நிரூபித்தல் போன்ற சாமர்த்தியங்களையும் அறவே களைந்துவிட்டு தனது சிந்தனையின் வேகத்திற்கு மொழி ஒரு தடையில்லை என்பதைப் படைப்பில் சாத்தியப்படுத்தியிருக்கிறார்.
விரகதாபத்தில் எரிதலை சுட்டும்போது ஒரு விசாலமான வாசகனும் அந்தத் தகிப்பின் சூட்டை உணரமுடிகிறது. மொழியின் ஜாலங்கள் மட்டுமே கவிதையைக் கட்டுவதற்கான முழுத் தகுதியும் ஆகிவிடாது என்பதனை நன்கு உணர்ந்திருக்கிறார். செயராமன் இந்த இடத்திற்குத் தனது படைப்புலகை நகர்த்தியிருக்க நிச்சயம் பல்வேறு வகைமைகளை முயன்றிருக்க வேண்டும். நவீன கவிதைகள் குறித்த தீவிர வாசிப்பும் இருந்திருக்க வேண்டுமென்பது என் அனுமானம்.
தமிழில் எல்லாப் படைப்பாளர்களும் முறை தவறாமல் தேவதச்சன், தேவதேவன், யவனிகா ஸ்ரீராம் கவிதைகள் குறித்துச் சிறிய பதிவு அளவிற்காவது எழுதி தனது இருப்பை வலுப்படுத்திக்கொள்வதைப் போல அதிகம் வாசிக்கப்பட வேண்டிய கவிஞராகச் செயராமன் இருப்பதற்கான அம்சங்கள் அவரது கவிதைகளில் நிரம்பவே உள்ளன.
மையத்தைச் சுற்றும் உறுப்பு
ஒவ்வொரு மனிதனும் எல்லாரையும்
ஒரு அங்குசத்தைப்போலக் கட்டுப்படுத்தும் அல்லது செயல்படுத்தும்
ஒரு சொல்லுக்காகத் தேடியபடி இருக்கிறான்
கணிதவியல் அறிஞன்
எல்லா விதிகளையும் உள்ளடக்கும் ஒரு பொதுவிதிக்காக
எண்களைப் பின்னிப் பிணைத்தபடி இருக்கிறான்
விதியே சொல்லாகவும்
சொல்லே விதியாகவும் மாறி இருக்கிற
ஒரு தத்துவத்தைக் கண்டடைய முடியாதிருக்கிறது
நீயாக முடியாத போதும்
உன்னைப் போல் ஆகிவிடவேண்டும் என்பது
எல்லாருக்கும் ஒரு குறிக்கோளாக இருக்கிறது
ஒதுக்குப்புறமான வனத்தில் நிகழ்த்தப்பட்ட தவங்களும்
ஆய்வுக் கூடங்களில் நிகழ்த்தப்பட்ட
உயிர்ப்பில்லாத பரிசோதனைகளும் ஒன்றையே மீண்டும் வலியுறுத்திச் சொல்கின்றன
வழிபாடுகள் என்ற பெயரில் நிகழ்த்தப்படும் ஓலங்களும்
அதிகாரங்களின் மூலம் எழும் நிர்வாகங்களும்
ஒன்றை நோக்கியே குவிந்து எழுகின்றன
தன்னை மையமாகவும்
தன்னை மையத்தைச் சுற்றும் உறுப்பாகவும்
வைத்துக்கொள்கிற ஒரு சுழற்சிக்காக முயற்சிக்கிறார்கள்
கடைசியில் நான் நீயாக இல்லாததற்காக
கொஞ்ச நேரம் வருந்திவிட்டு
என் வேலைகளைக் கவனிக்கத் தொடங்குகிறேன்.
தனியே விளக்கி பொருள் கூறுமளவுக்கான பூடகத்தைக் கொண்டிருக்காத கவிதை என்றாலும் கவிதைக்குள் செயல்படும் அதீதம் என்பது வாசிப்பின் போதத்தை அதிகரிக்கச்செய்கிறது. ‘மையத்தைச் சுற்றும் உறுப்பு’ என்பது பல்வேறு எண்ண அதிர்வலைகளைத் தோற்றுவிக்கிறது. அரச அதிகாரம், நிறுவன அதிகாரம், தனிமனிதர்களின் ஈகோவை நிறைவு செய்வதற்கான அதிகாரம் எனக் கவிதை அனைத்து சூழல்களிலும் வாசிப்பதற்கு உகந்ததாக உள்ளது.
‘ஒதுக்குப்புறமான வனத்தில் நிகழ்த்தப்பட்ட தவங்களும்’ என்பதைத் தொடர்ந்து வரும் வரிகள் கவிக்குரலோனின் சலிப்பானது எவ்வளவு பாரதூரமாகச் சிந்திக்கிறது என்பதனை வெளிப்படுத்துகிறது. ‘தன்னை மையத்தைச் சுற்றும் உறுப்பாகவும் வைத்துக்கொள்கிற ஒரு சுழற்சிக்காக’ என்ற வரியை இளம் வாசகர்கள் அறிந்துகொள்ள விரும்புகிறேன்.
உலகியல் நடவடிக்கைகளில் காணப்படும் ‘தானே மையமாதல்’ என்பதின் களைப்பை நெருங்கி தொட்ட, சதா அதனை அவதானிப்பதன் மூலம் சலிப்படையும் அதிலிருந்து விலகியிருக்கும் ஒரு படைப்பாளர் இங்கே முன்னோடியாக காணக்கிடைக்கிறார்.
கலைப்படைப்பானது மையத்தைச் சுற்றும் உறுப்பாக இல்லாது ஒவ்வொரு அதிகாரத்திலிருந்தும் தன்னைத் துண்டித்துக்கொள்ளவே எத்தனிக்கிறது. அதுவே கலையின் ஜீவனாகவும் கலைஞனை இயக்குகிறது. கலையின் இந்த மைய அம்சத்திற்கு எதிராக இலக்கியமென்பதும் நிறுவனமயப்படுத்துப்பட்டுக் கொண்டிருக்கிற சூழல் மிகவும் ஆபத்தானது.
அத்தகைய ஆபத்தைச் சத்தான படைப்பூக்கம் நிறைந்த படைப்பாளர்களுக்கு ஒரு திரையாக அமைந்து இலக்கியத்தை ஒற்றைத்தன்மை வாய்ந்ததாக மாற்றவும் செய்கிறது. பல தரப்பிலிருந்தும் நவீன இலக்கியத்தை நோக்கி புதிய வாசகர்கள் வருகிறார்கள். அவர்களை வண்ணதாசன், கலாப்ரியா போன்ற ஆளுமைகளைத் தாண்டாமல் பார்த்துக்கொள்வது போலவே ஒரு கருத்தாக்கம் கட்டமைக்கப்படுகிறது.
அல்லது புதுமையென முன்மொழியப்படுவதும் இந்த வகைமைகளின் சிறிய நகல்களாக இருக்கின்றன. தற்போதைய தீவிர இலக்கியப் படைப்பாளர்களாகக் கருதப்படும் சிலரும் இந்த மையத்தை நோக்கியே இலக்கியப் பயணத்தைத் தொடர்கிறார்கள். மேற்சொன்னவர்களை முன்னிலைப்படுத்துவதன் மூலம் அவர்களுக்கான அங்கீகாரம் கிடைப்பதுடன் கவிதையின் பலப்படித்தான வகைமைகளும் தோன்ற வாய்ப்பமையும்.