கலை இலக்கிய விமர்சன சிறு சஞ்சிகை

கவிஞர் வெய்யிலின் "அக்காவின் எலும்புகள்"
- ஓயவே ஓயாத தொனிகளின் உற்பத்திக் களம்-  

க.பஞ்சாங்கம்

பகிரு

                                                       

வெய்யில், '"அக்காளின் எலும்புகள்", (2018),, கொம்பு பதிப்பகம், நாகப்பட்டினம். அலைபேசி:9952326742. பக்.80. விலை ரூ 100/-.

            "அட! இத நம்ம கூட எழுதியிருக்கலாமே"     என்று எந்தக் கவிதை வாசிக்கிற வாசகனின் வாயை முணுமுணுக்க வைக்கிறதோ அது நல்ல கவிதை என்கிற ஒரு கணிப்பு முறை எனக்குள் என்றும் உண்டு. வெய்யிலின் "அக்காவின் எலும்புகள்" என்ற தொகுப்பில் உள்ள கவிதைகள் பலவும் எனக்குள் அப்படி ஒரு எண்ணத்தை வாசிக்க வாசிக்க விதைத்த வண்ணம் இருந்தன. நான் பிறந்து வளர்ந்து விளையாடிய பூமியும் இராஜபாளையத்திற்கு அருகில் உள்ள புத்தூர் என்ற தெற்கத்திய கிராமம் என்பதனால் இவர் கவிதைகளுக்குள் விரியும் ஒவ்வொரு காட்சியும் எனக்கு நெருக்கமான, பரிச்சயமான ஒன்றாகத் தோற்றம்  தந்தன.  அக்காட்சிகளை மொழிப்படுத்தும் விதத்தில் நவீனத் தமிழ்க் கவிதை ஆக்கத்தில் பெரும் பாய்ச்சல் என்று சொல்லும்படி, வியப்பில் ஆழ்த்தி விடுகிறதொனிகளோடு கூடிய ஒரு வகையான கவித்துவத் திரட்சியை இத்தொகுப்புக் கொண்டிருப்பதால் வாசிப்பின் பெருங்களிப்பை முழுமையாக அனுபவிக்க வாய்த்தது.

    ****

             ஊரைச் சுற்றிலும் கிணறுகள்; ஒவ்வொரு கிணற்றுக்கும், நீச்சல் தெரியும் ஆதலால் காலில் கல்லைக் கட்டிக்கொண்டு கிணற்றில் விழுந்து  மாண்ட பெண்களின் கதைகள் மட்டும் அல்ல, மரணக் காட்சிகளும் உண்டு. அந்தக் கிணறுகளில் ஒவ்வொரு ஆண்டும் கண்ணீர்க் கோலங்களோடு வழிபாடுகள்,படையல்கள். இது போலவே ஊரைச் சுற்றியுள்ள மரங்களுக்கும் இப்படியான கதைகள், காட்சிகள் ஏராளம் உண்டு .இன்னும் அப்பன், அண்ணன், தம்பிமார்களால் வீட்டுக்குள்ளேயே அடித்துக் கொல்லப்பட்ட குமரிகளின் ஓலம், கணவன்மார்களால் கொலை செய்யப்பட்ட மனைவிமார்களின் சத்தம் எல்லாம் மின்சாரம் வராத அந்தச் சிற்றூரில் இரவு வந்துவிட்டால் இப்படித் துள்ளத் துடிக்கக் கொல்லப்பட்ட பெண் ஆவிகளின் நடமாட்டம் சார்ந்த கதைகள் ஊர்க் காற்றில் நிறைந்து கிடக்கும். இப்படிப்பட்ட இந்தக் கிராமத்தில்தான் என் பதின்பருவம் கழிந்தது. பிழைப்பிற்கான போராட்டக் களத்தில் மறைந்து எங்கேயோ மூலையில் பதுங்கிக் கிடந்த அத்தனைக் காட்சிகளும் வெய்யிலின் அக்காவின் எலும்புகள் கவிதைகளை வாசிக்க வாசிக்க மேல் எழுந்து வந்து என்னைப் படாத பாடு படுத்தி விட்டன. கவிதையில், வேதனைகள் அழகியலாக மாறும் என்பதை இந்தக் கவிதைகளில் தரிசிக்க முடிந்தது.

                    "கழுத்த நெரி காலப்புடி

                     கழுத்த நெரி காலப் புடி 

                     கழுத்த நெரி காலப்புடி

                     "இந்த மைனாவுக்குக் கிறுக்குப் புடிச்சிருக்கு"

                      என்றார் அப்பா.

                      பொருனையின் சூல்குழி பார்க்க

                       மேற்குத் தொடர்ச்சி மலை போன போது

                       கூட்டி வந்தார்கள் இந்தப் பேசும் குருவியை

                       அக்காவின் மடிச்சூட்டிலயே வளர்ந்தது

                        குறிஞ்சிப் பூக்களை அறிந்தது

                        கர்ப்பமாக இருந்தபோது

                        அம்மா நடந்து செல்வதைப்போல நடந்தது

                       அக்காவும் மைனாவைப் போலவே

                       நடக்கத் தொடங்கியதில் இருந்து 

                      காணாமல் போனாள்.

                       தங்கையும் நானும் கேட்டுக் கொண்டே இருக்கிறோம் 

                       அக்கா எங்கே 

                       அக்கா எங்கே 

                       அம்மா குலுங்கிக் குலுங்கி அழுகிறாள்.              

இந்தக் கவிதையில் இடம் பெறும் "கழுத்தை நெரி,கழுத்தை நெரி"  என்ற தந்தைமார்களின் குரலை என் பதின் பருவத்தில் என் இரு காதாலும் கேட்டிருக்கிறேன். எங்கள் வீட்டு மொட்டை மாடியில் நானும் என்னை மதுரையில் இருந்து பார்க்க வந்திருந்த என் வகுப்புத் தோழன் உசேனும் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்த யாமத்தில் "பஞ்சு, எழுந்திரு ,யாரையோ அடித்துக் கொலை செய்வது மாதிரி இருக்கு" என்று எழுப்பினான் நண்பன். எதிரே இருந்த அடுத்த தெரு பண்ணையார்  வீட்டுக்குள் இருந்து சத்தம் வருகிறது. இவ்வளவிற்கும் அந்தச் செல்ல மகள் சாதி மாறி கூட விரும்பவில்லை; பரம்பரை பரம்பரையாகப் பகைக் குடும்பத்தைச் சார்ந்த ஒருவனை விரும்பி விட்டாள். அதற்குத்தான் இவ்வளவு கொடூரமும் .கருவேல மரங்கள் நிறைந்த நெல்மேனிக் கம்மாய்க்குள் எனக்கு ஒன்று விட்ட அந்த அக்கா இரவோடு இரவாகச் சாம்பல் ஆனாள். பிறகு காலம் ஓடியது; ஆனால் அவள் துடியாய் நின்று குடும்பத்தை அலக்கழித்தாள். எனவே அவளைத் தெய்வமாக்கினரார்கள்.

"அக்காவுக்கு அன்னாடம் விளக்கு வைத்தனர் .

முட்டை வீசினர் ;

பிள்ளைகளுக்குப் பெயர் வைத்தனர்;

ஆண்டுக்கு ஒரு முறை படையல் செய்தனர்"

.ஆனாலும் அக்கா அடங்குவதாக இல்லை.அவளை அலற அலற அடித்துக் கொன்ற வீடும் பாழ் அடைந்து போயிற்று. பண்ணையார் வாழ்வும் ஊரே பரிதாபப்படும்படி விழுந்து போனது.

இப்படித்தான் கிராமங்கள் முழுவதும்  செல்லத்தாய் அம்மன், இசக்கி, வனப்பேச்சி, நீலி,  மாடத்தி என்ற   பெயர்களில் தெய்வங்களாக எழுந்து நிற்கிறார்கள்.

****

         பெண்களை இந்த ஆண்  மையச் சமூகம் கிணற்றில் தள்ளலாம், மரத்தில் தொங்க விடலாம், நெருப்பில் எரிக்கலாம், விஷம் கொடுத்தும் அடித்தும் கழுத்தை நெரித்தும் சூளையில் தூக்கி எறிந்தும் காட்டிற்குள் அழைத்துச் சென்று யானையைப் பிடிக்கத் தோண்டிய  குழியில் தள்ளிக் கதற கதற உயிரோடு புதைக்கலாம்; ஆனாலும் அவர்களை இந்த ஆண்களால் ஒன்றும் செய்து விட முடியாது என்பதுதான் வரலாறு.

           பஞ்சாங்கம் என்ற எனது பெயரில் கூட இப்படி ஒரு கதைதான் உள்ளது. எங்கள் ஊரில் ஒற்றை வீடு; உள்ளே ஐயர் குடும்பம்; பஞ்சாங்கம் பார்த்துச் சொல்வதால் அவருக்குப் பஞ்சாங்கம் ஐயர் என்று பெயர் 'அவரை இழுத்துக் கொண்டு ஒரு பனையேறி மகளான வீரமாகாளி கருமலைக் காட்டுக்குள் ஓடிச் சென்று ஒளிந்து வாழ்கிறாள். விடுவார்களா பனை ஏறிகள். தேடிப்பிடித்து இழுத்து வரும் வழியிலேயே பதநீர் காய்ச்சும் பண்ணைக்கருகில் அடுக்கி வைக்கப்பட்டு இருக்கும் காய்ந்த பனைமட்டைப்போரில் இருவரையும் கையும் காலையும் கட்டித் தூக்கி எறிந்து தீ வைத்துவிட்டு ஊருக்குள் சத்தம் இல்லாமல் திரும்பி விடுகிறார்கள். ஆனால் பெண் அவர்களை எளிதாக விட்டுவிடுவாளா?

மலையின் அடிவாரத்தில் இருக்கும் கூப்புக்குள் கோடைகாலத்தில் விறகு எடுக்கப் போகும் மனிதர்களைப் பயம் காட்டுகிறாள்; ஊர் மக்கள் காய்ச்சலில் படுக்கிறார்கள்; கோடாங்கி ஆடி அருள் வாக்குத் தருகிறார். பஞ்சாங்க அய்யருக்கும் வீரமாகாளிக்கும் அவர்களை வெட்டிக் கொன்ற அந்தக் காட்டில் கோயில் கட்டிக் கும்பிட வேண்டுமாம்; அப்படித்தான் நடந்தது;

எனக்கு விவரம் தெரிய கிழக்கே பார்த்து இருக்கும் பஞ்சாங்க அய்யருக்குச் சைவப் பொங்கல்; வடக்கே பார்த்து இருக்கும் வீரமாகாளிக்குக் கோழி அல்லது கிடாய் பலியிட்டு வழிபடும் மரபு இருந்தது. ஆனால் பனையேறிகளின் பிள்ளைகள் தராசு தூக்கி  வணிகர்கள் ஆயினர்; அவர்களின் பிள்ளைகள் படித்துப் பதவியில் அமர்ந்தனர்; இப்பொழுது கோயில் நஞ்சை, புஞ்சை, நிலம் என்று பணக்காரக் கோயில் ஆயிற்று. பிறகு என்ன?

சங்கராச்சாரியார் வருகையும் நடந்தது; கடந்த 20 ஆண்டுகளாக அது சைவக் கோயிலாயிற்று; உயிர்ப்பலியிடுவது தடை செய்யப்பட்டு விட்டது

       பெண்களிடம் அடங்கிப் போவதுதான் நல்லது என்று திரும்பத் திரும்ப ஆண்களின் மூஞ்சியில் அனுபவம் அடித்துக் கூறினாலும் ஆண்களின் ஆதிக்கமும் கொடூரமும் அணுவளவும் குறைந்தபாடில்லை; ஆண்களின் மொழி கட்டமைத்திருக்கும் புனைவு அவ்வளவு வலுவானதாக ஆழ்மனத்திற்குள் இறங்கி இருக்கிறது.

       ****

.        தாய்மைக்குத் தவிக்கும் பெண்ணின் காம உடலையும் உள்ளத்தையும் ஒரு சிறிதும் ஆண்களால் அசைக்க முடியாது; அவள் எத்தகையக் கொடூரச் சூழலிலும் தன்னையும் தன் காமத்தையும் தாய்மையையும் நிலைநிறுத்திக் கொள்ளும் இயற்கை மயமானவள் என்பதையும் இந்தத் தொகுப்பில் பல கவிதைகள் புலப்படுத்தி நிற்கின்றன. எவ்வளவு அடக்கி ஒடுக்கிக் கண்காணிப்பின் கீழ் அமுக்கி வைத்திருந்தாலும் தாய்மை தேடும் அவள் காம உடல் ,ஒரு மைக் செட் காரனை (ப.37) இடுப்பில் அரிவாளோடு போகிறவனை (30) புதுக் கூரை மேயவந்தவனை (22) குடை ரிப்பர்க்காரனை (70) மாட்டு லாடம் அடிக்கிறவனை (64) பகல்வேசக்காரனை (58) உப்புக்காரன் மகனை என்றெல்லாம் எப்படித் தேடி அடைவது என்ற நுணுக்கம் அறிந்தது என்பதையும் வெய்யிலின் கவிதைகள் அழகியல் தரும் சுவை குறையாமல் காட்சிப்படுத்துகின்றன. பிரஞ்சுப் பெண்ணியல் படைப்பாளி ஹெலன் சீக்ஸ் இப்படி எழுதுகிறார்:

      "நாங்கள்  நாங்களாகவே கடல், மணல், பவளம், கடற்கரைகள், கடல் கொந்தளிப்புகள், அலைகள், நீந்துபவர்கள், குழந்தைகள் எனப் பன்முகப்பட்டவர்களாக இருக்கிறோம்; ஆமாம் அப்படித்தான் கலந்தபடிக் கிடக்கிறோம்; பெண் காமக் களிப்பில் மகிழ்ந்து மாழ்கிறாள்; அவள் பன்முகமாய்  விரியும் காமக் களிப்பில் மூழ்கியுள்ளாள்; அவள் காற்றில் விமானம் போல் பறந்து நீந்துகிறாள்; அவள் தன்னைத்தானே பற்றிப்  பிடித்துக் கொள்வதில்லை; அவள் சிதறிப் பரவுகின்றாவளாக, பெரும்  வியப்பிற்குரியவளாக, ஆசையில் துடிப்பவளாக இருக்கிறாள். அதே நேரத்தில் மற்றவர்களைத் தாங்கிக்கொள்ளும் ஆற்றல் உடையவளாகவும் விளங்குகிறாள்"

(மேடுசாவின் புன்னகை, மொழிபெயர்ப்பு க.பஞ்சாங்கம்.,).

மேலும் ஹெலன் சீக்ஸ் எழுதுகிற மற்றொரு இடமும் இந்த இடத்தில் குறிக்கப்பட வேண்டிய ஒன்று.

"இந்தப் பூமியில் எந்த ஒன்றும் அவர்களைப் புண்படுத்தி விட முடியாது; தூரங்களும் பிரிவுகளும் அவர்களின் இயங்கியலுக்கு முட்டுக்கட்டை போட்டு விட முடியாது; ஷேக்ஸ்பியருடைய கிளியோபட்ரா இத்தகைய வெற்றி பெற்ற சுதந்திரமான பெண்மைக்குச் சரியான எடுத்துக்காட்டு" என்கிறார் . இப்படியான ஒரு பெண்மையை வெய்யில் இந்தத் தொகுப்பின் மூலம் தமிழ் மொழிக்கு வழங்கியுள்ளார் .ஆண் மையச் சமூக  வெளியில் எத்தனை எத்தனைக் கொடூரம்; ஆனாலும் வெய்யில் கவிதை ஒன்று,

        "அக்கா எறிந்த எலும்பு வளரி சீவிய

        பாளைகளிலிருந்து  தீராமல் கொட்டுகிறது

        யாவருக்குமான கள்"

என்று மனித உடம்பின் உச்சபட்ச உற்பத்தி எனச்சொல்லத் தக்கக் கருணையின் ஊற்றுக் கண்ணாகப் பெண்தான் விளங்குகிறாள் என்பதையும் பதிவு செய்து விடுகிறது.

        ****

                  ஆதிகாலத்தில், பெரிதும் அறியாப் பருவ காலத்தில் இருந்தே மாதந்தோறும் இரத்தம் கொட்டுவதும் திடீரென வயிறு வீங்குவதுமாக இருந்த பெண்ணின் உடம்பைப்  புதிராகப் பார்த்து மிரண்டு போன ஆண்கள், அவளுக்குத் குறைந்தவன் ஆண் அல்ல என்பதை நிரூபிக்கவே தனது குறியையும் சுன்னத்து என்ற பெயரில் வெட்டி இரத்தம் கொட்ட வைத்துக் காட்டி  இருக்கின்றான் என்கின்றனர்  மானுடவியல் அறிஞர்கள். இவ்வாறு அருகிலேயே புதிர் நிறைந்த மற்றொரு உடம்போடு வாழ நேர்ந்ததிலிருந்து விளைந்த அச்சமும் மருட்சியும் இயலாமையும் புரியாமையும் சேர்ந்து அவனை, அவளுக்கு எதிரான வன்முறையாளனாக வளர்த்தெடுத்துவிட்டன. அந்த ஆதி வன்மத்தையும் அதைப் பெண் எதிர் கொண்ட விதத்தையும் தனக்குப் பரிச்சயமான கிராமத்து நிகழ்வுகளாலும் சடங்குகளாலும் தொன்மக் குறியீடுகளாலும் அதன் மொழி வாகினாலும் வெய்யில் "அக்காவின் எலும்புகள் "மூலம் அற்புதமாக வாசகன் முன்னால் நிகழ்த்திக் காட்டுகிறார்.

**முளையிட்ட விதை நெல்லில் விழிப்பது 

    எவ்வளவு நல்ல குறி (54)

**நல் நிமித்தம் சாமியோ...

 கிழக்கிலிருந்து வீசி வருகிறது , பதனி காய்ச்சிய வாசனை. (67)

**அந்தத் தாயோளி சூரியன் வேறு. (32 )

**உலக்கையில் பொடி மண் இட்டு

 மேலும் கீழுமாய் 

அரிவாளை மீட்டிக் கொண்டிருக்கிறான். (36)

**கூரையில் பூத்திருக்கும் பூசணிப்பூக்கள்.(55)

** எளங்குருத்து திங்கனுமுன்னு காயிதா அக்கா. (30)

**சாரை ஒன்று உளுந்தங்காட்டைப் போட்டு உலுப்புகிறது.

**முற்றத்தில் முயங்குகிற  பூரான்களைக்

கொத்திக்கொத்தித் தின்கிறது கோழி. (53)

இவ்வாறு இந்தப் பிரதி முழுவதும் நிறைந்து கிடக்கும் ஊர் மண்ணின் வாசனையோடு கூடிய மொழியும் காட்சிகளும் அவை எழுப்பும் ஓயவே ஓயாத தொனிகளும் வெய்யில் என்கிற புத்தம் புதிய நவீனக் கவிஞனின் தனித்த அடையாளங்களாக வெளிப்பட்டு நமக்குள் ஒளிபரப்புகின்றன. வெய்யிலின் "மகிழ்ச்சியான பன்றிக் குட்டி" என்ற தொகுப்பில் உள்ள ஒரு கவிதையோடு இந்தக் கட்டுரையை முடித்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன்:

        "நசுக்குதல் எனும் சொல் எறும்புகளால் 

         தூக்கிச் செல்லப்படுகிறது "

இந்தக் கவிதையின் தலைப்பு "மகிழ்ச்சி."

இந்த இரண்டு வரியில்தான் எத்தனை எத்தனைத் தொனிகள். வெய்யில் தமிழ்க்கவிதைப் பரப்பில் நிலை பெற்றுவிட்டார்...

குறிச்சொற்கள்

மேல் செல்