கலை இலக்கிய விமர்சன சிறு சஞ்சிகை

அஜ்னபி நாவல் குறித்து எனது பார்வை

களந்தை அப்துல் ரஹ்மான்

பகிரு

அரபு நாட்டில் இருந்து சொந்த ஊர் திரும்பும் ஒருவர் கொண்டு வரும், பெரிய பெரிய அட்டைப் பெட்டிகளில் இருந்து எடுத்துத் தரப்படும் ஃபெர்பியூம், வாட்ச், எலக்ட்ரானிக் பொருட்கள் முதல் சுண்டு விரல் சைசில் தரப்படும் கோடரி தைலங்கள் வரை அனைத்திலும், வெளிக்காட்டிக் கொள்ள முடியாத அல்லது வெளியே காட்டத் தெரியாத அன்பும் உறவும் நட்பும் நிறைந்திருக்கிறது. சிலருக்கென்றே பிரேத்யேகமாகப் பொருட்கள் கொண்டுவரப்படுகிறது என்றால், அவரைப் பற்றிய நினைவுகளும் தேடல்களும், அரபு நாட்டு வாழ்வில் அதிகம் இருந்திருக்கும் என்பதற்கான அடையாளம் அந்தப் பொருட்கள். இவையெல்லாம் கொடுப்பவருக்கு மட்டும் தான், இந்தப் பொருட்களைப் பெறுபவர்களில் சொற்பமானவர்கள் மட்டுமே அந்த அன்பையும் அதனுள் இருக்கும் ஆத்மார்த்தத்தையும் அறிந்திருப்பர், மற்றவர்களுக்கு வெளிநாட்டுப் பொருட்கள் என்பது நவீன உலகமயமாக்காலால் ஏற்பட்ட ஒருவித ஈர்ப்பு அவ்வளவே!.

நியாயமாக உள்ளூர யோசித்துப் பார்த்துச் சொன்னால் நானும் சில நேரங்களில் வெளிநாட்டுப் பொருட்கள் மீதான ஈர்ப்புடனே இருந்திருக்கிறேன். அது மலையாளத்தில் சலீம் அஹம்மது இயக்கத்தில் மம்மூட்டி நடித்த ‘பத்தேமாரி’ திரைப்படம் பார்க்கும் முன்னர் வரை. அப்படத்தை அஜ்னபி நாவலுடன் ஒப்பிட முடியாதுதான் என்றாலும், நாவலில் நாசரின் வாப்பா அப்துர்ரஹ்மான் சொல்வது போல “அரபு நாட்டில் வாழ்பவர்களைச் சொந்த குடும்பத்தினரே விருந்தாளிகள் போலத்தான் பார்க்கின்றனர்” என்பதை அதன் உளவியல் ரீதியான வலிகளோடு நிரப்பியது பத்தேமாரி படம்.

ஆனால், அஜ்னபி நாவல் இன்னும் பற்பல படிகள் மேலே போய் அரபுலகம், அங்கு நிலவும் அரசியல், வாழ்வியல், சில அரபிகளிடம் மட்டும் ஒட்டிக்கொண்டிருக்கும் கலை, இலக்கியம்... ‘துவைஜி’ போன்ற மனித வடிவ மிருக அரபிகள், மனித மேன்மைக்குச் சாதி, மதம், இனம், மொழி என எவ்வித அடையாளமும் இல்லை என்பதை வெகு இயல்பாக நினைவில் நிறுத்தும் ஷமியின் அரபி, ஷமி அரபியின் தம்பியான காவல்துறை அதிகாரி(அரபி), மிஷ்ரி கிழவன், அரூஷா, நல்ல நிலையிலும் கொத்தடிமைகளாகவும் வாழும் அஜ்னபிகள் என அனைத்தையும் கழுகுப் பார்வையில் படம் பிடித்துள்ளது.

மிக முக்கியமாக அரபு நாடுகளை அமெரிக்கா எப்படித் தனது கைப்பாவையாக நகர்த்தி வருகிறது என்ற சர்வதேச அரசியலை, பிரசாரப்படுத்தாமல் போகிற போக்கில் கதைவழி கடத்திச்செல்வது அட்டகாசம். மொழி தெரியாத தேசத்தில் தாய்மொழியில் வெளியான பத்திரிகையை இறுக்கப் பற்றிக்கொண்டு "என் மொழியின் பத்திரிகைதான், ஆனால் எங்கள் பத்திரிகை எவையும் எங்களுக்கானவை அல்ல" இந்தியாவில் இருக்கும் முஸ்லிம்களின் கலை, இலக்கியம், ஊடகம், உரிமை அரசியல் என அனைத்தையும் என ரத்தினச் சுருக்கமாக இந்த ஒருவரியில் அடைபட்டுக் கிடக்கின்றது.

ஒழுக்கம் என்றாலும் தூய இஸ்லாம் என்பதற்கும், அரபு நாடுகளையே உதாரணம் காட்டும் இங்கிருக்கும் (தமிழ்நாடு) ஒருசில அடிப்படைவாத அமைப்புசார் மடையர்களுக்கு அஜ்னபியை விடச் சிறந்த நாடிபிடி வைத்தியம் இருக்காது! நாவலின் ஒரு காட்சியில் காதர் இப்படி வெள்ளந்தியாகக் கேட்பான், “காக்கா இங்கே எல்லாம் கிடைக்குமா..?”

”பைசா உண்டும்முன்னா வாப்பா உம்மாவத் தவிர எல்லாம் கிடைக்கும்.”

“ஒரு திருட்டு உண்டுமா ஒரு மது உண்டுமா ஒரு அனாச்சாரம் உண்டுமா… மா… மா… மான்னு அரேபியா ரொம்ப யோக்கியம்னு எங்க ஆலிம்ஷா போன வெள்ளிக் கிழமை பயான் பண்ணாரு”.

“இங்க பிரம்மாண்டமான ரகசிய உலகம் கெடக்கு. அது அவனுவளுக்குத் தெரியாது அவனுவள இங்க கொண்டு வந்து ஈச்சமரத்தில் ஏத்தி உட்டாத் தெரியும். வெதை வெளிய பிலுங்கிரும் காதிரே, பீத்துனாலும் பீத்துச் சாதாரணப் பீத்தா பீத்தானுவோ.” இதுதான் அரேபியா என்பது ஆன்மிக உலகம் என்ற மாயையின் பின்னால் இருக்கும் யதார்த்தம். இந்நாவலின் இன்னொரு பகுதியில், புதிதாகக் கட்டப்பட்ட பாலம் வழியே, அரபிகள் மது அருந்துவதற்காகவே நாடு விட்டு நாடு செல்வதை வழமையாக்கி வைத்துள்ளனர் என்பதையும் ஆசிரியர் கதைக்குள் கொண்டு வந்திருப்பார்.

இஸ்லாம் எல்லாவிதத்திலும் நல்லதையே போதித்திருந்தாலும் அதனை மனிதர்கள் சூழ்நிலைக்கேற்ப எப்படியெல்லாம் பயன்படுத்துகிறார்கள் என்பதை, அரபிகள் மூலமே பேச வைத்திருப்பது அருமை. தான் செய்த அல்லது செய்ததாக நினைக்கும் பாவங்களைப் போக்க ஹஜ், உம்ராவிற்காக மக்கா சென்று பாவமன்னிப்பு கேட்க வேண்டும் என விரும்பும் பைசலிடம், “துவைஜி அளவுக்கா… இல்லயே, உனது பாவங்களுக்காகப் பிரார்த்தனை செய். எல்லோரும் ஏதோ வகையில் பாவங்களில்தான் வாழ்கிறோம். பிரார்த்தனை உன் பாவங்களைக் கழுவிவிடும் அல்லது கழுவப்பட்டதைப் போல நீ உணர்வாய். மக்காவில் போய்தான் பிராத்திக்க வேண்டுமென்று கிடையாது எங்கிருந்தும் பிரார்த்திக்கலாம்.” என வெகு இயல்பாக இஸ்லாம் இதுதான் என்பதை மிஷ்ரி என்ற இறை நேசர் உதாரணம் காட்டி, அரபி பைசலுக்கு விளக்கமளிப்பது அனைவருக்குமானது.

நாவலில், மம்மனிபா ஆடும் ஆட்டத்தை ஊரில் இருந்து வந்த கருத்தான் காதர் ஒரே ராத்திரியில் தனது பேயரை வார்த்தைகளால் அலறவிட்டு, அவனைக் கக்கூஸில் சென்று அழ வைத்துவிடுவான். அப்படித்தான் அரபுலகத்தின் இருண்ட பக்கங்களைப் புட்டு புட்டு வைத்துள்ளது அஜ்னபி. இந்தப் பேயரை நம்மூர் அடிப்படைவாதிகள் புரிந்தும் புரிந்துக்கொள்ளாத மாதிரி மறுக்கின்றனர் சிலருக்கு மண்டையில் ஏறுவது கடினமாக உள்ளது. அதனால் தான் இன்னும் அறிவியலையும் கால அளவீடுகளையும் கணிக்க முடியாமல் அரேபியாவை பின்பற்றிப் பிறை பார்க்காமல் பொருநாள் தினங்களை முண்டியடித்துக் கொண்டாடி மகிழ்கின்றனர். அதேபோல், உள்ளூரில்(தமிழகம்) நடக்கும் மோதியார்-ஆலிம்ஷா வாய்க்கால் சண்டை, ஆலிம்ஷா-ஜமாத் தலைவர் மோதல் என எதையும் விட்டுவைக்காமல் முஸ்லிம் சமூகம் குறித்த பலதரப்பட்ட சுய விமர்சனங்கள் அஜ்னபியில் வரவேற்க வேண்டியவை. இதையெல்லாம் படித்தாவது சில ஃபத்வா பேக்டரிகள் விழித்துக்கொள்ள வேண்டும்.

பணியடிமையில் ஆரம்பித்து மம்மலி, மம்மனிபா, மம்மக்கண், குமரி இக்பால், நாசர், பிரபு, கருத்தான் காதர், மிஷ்ரி கிழவன், பாகிஸ்தானி இம்ரான், ஷமி, அவனது அரபி, துவைஜி, புல்லாங்குழல் இசைக்கும் ஆப்கானிஸ்தான் டிரக் டிரைவர் என இன்னும் பலதரப்பட்ட கதை மாந்தர்கள் பைசலை சுற்றி இந்த நாவலில் வந்து செல்கின்றனர். அதாவது இத்தனை பாத்திரங்களையும் ஒரே புள்ளியில் இணைக்கும் இணைப்புச் சங்கிலியாகப் பைசல் வந்து செல்கிறான். கடும் கொடுமைகளை அனுபவித்த பைசல் ஜட்டியில் ரியால் வைத்துக்கொண்டு போலீசில் சிக்கிக் கொள்ள வேண்டும் என அழைந்தும், நல்லபடியாக இந்தியா திரும்புகிறான். ஆனால், அவனால் நம் கவனத்தில் வந்த ஏனையர்கள் என்ன ஆனார்கள்? அது மம்மலியாக இருக்கட்டும் அல்லது பணியடிமையாகவோ, நாசருக்குப் பகரமாக ஷியா அரேபியிடம் டெய்லர் வேலை செய்துகொண்டிருக்கும் பாகிஸ்தானி, பைசலுக்காகவே காத்திருக்கும் அரூஷா, நீலப்படங்கள் அலுத்துப் போனாலும் அவனுள் புரண்டோடும் காமத்தை கட்டுப்படுத்த முடியாத மம்மக்கண், அடுத்தவர்களின் மடல்களில் அந்தரங்கங்களைத் தேடும் மம்மனிபா என இன்னும் எத்தனையோ பேர். அவர்கள் என்ன ஆனார்கள்..? அரேபியா என்னும் மாயத்தோற்றம் கொண்ட பாலைவன புதை மணலில் தங்களது இளமையையும் வாழ்வையும் தொலைத்துக் கொண்டதில் இருந்து தங்களை மீட்டார்களா..?. இதற்கெல்லாம் பதில் எப்போதும் கிடைப்பதாக இல்லையே!.

ஒவ்வொருவரும் வாழ்வின் பல உணர்வுகளையும் அதன் பின்னால் இருக்கும் ஆழமான உளவியலையும் நம்முன் கிடத்திப் போடுகிறது. இவர்களில் ஒருவர் இல்லையென்றாலும் அஜ்னபி நிறைவடையாது; உலகமும் அதுபோலத் தான்.

இன்பமோ, துன்பமோ..? அரபுலக வாழ்வில் ஒருவனுக்கு எது நேர்ந்தாலும் அருகிலிருப்பவர்கள் தான் அத்தனைக்கும் ஆறுதல், வடிகால், அவர்களின் அரவணைப்பு தான் எல்லாமும். அதில் மொழி, இனம், சாதி, மதம் என எதுவும் இல்லை. உண்மையான ஆத்மார்த்தமான அன்பும் மனிதமும் மட்டுமே நிறைந்திருக்கின்றது. இப்படியான பல நிகழ்வுகள் அஜ்னபியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றன. ஊரில் நடக்கும் திருமணத்துக்காகக் கூடியிருந்து விருந்து வைத்து பசியாறுவதும், ஊர்பாடுகள் கதைப்பதும், ரஜினியை மோதியாராக நடிக்க வைக்கக் கதை எழுதுவதுமாக எத்தனை எத்தனை மகிழ்ச்சியான நிகழ்வுகள். அனைவரும் கூடியிருந்து பசியாறுவது எப்படியான தருணம் என்பது, நாவலில் தொடர்ந்து பல இடங்களிலும் வந்துகொண்டே இருக்கும். ஒன்றாக அமர்ந்து உணவு சாப்பிடும் வழக்கம் நம் குடும்பங்களிள் முன்னைவிட ரொம்பவே குறைந்துவிட்டது. அது ஒரு அழகிய தருணம் என்பதையும் அதில் கிடைக்கும் மகிழ்ச்சியில் அளவீடு இல்லை என்பதையும் வரும் தலைமுறை அறிய வேண்டும்.

அரபு நாடுகளில் பிழைப்புக்காக வாழ்பவர்களில் சிலர் வெறுமையின் வடிகாலாகக் கலை, இசை, இலக்கியம், புதிய தேடல், 37வது மாடியில் இருந்து நிலவை ரசிப்பதுமாகத் தங்களது வாழ்வை நகர்த்திக் கொள்வதைப் போல, இன்னும் சிலரோ வெறுமையின் உச்சத்தில் குடி, சூது, நீலப்படங்களைத் தங்களுக்குள் நிறைத்துக் கொண்டதையும் நாம் அவர்களின் நிலையில் இருந்து ஏற்றுக்கொள்ளதான் வேண்டும். “முதலில் இதைப் பார்க்கும் போது உடம்புக்குள் ஒரு மாதிரியா இருக்கும் பைசலே!, இப்போ தினமும் பார்த்து பார்த்து இது நாடகம் மாதிரி ஆகிடுச்சி” எனச் சொல்லும் மம்மக்கண்ணுக்கு தலை இல்லாத துணிக்கடை பொம்மைக் கூட இணையாக இருப்பதில் அவனது தவறு ஏதும் இல்லைதானே! அறையில் தனியாக இருக்கும் போது, சும்மா கழுத்தில் தூக்குக் கயிறு மாட்டி பார்ப்பதும், அதைக் கண்ட மற்றொரு நண்பன், ஒருத்தன் தற்கொலை செய்தால் ஒட்டுமொத்தமாக அறையில் இருக்கும் அத்தனை பேரின் நிலை என்னவாகும் என்று அச்சப்படுவதும் அவ்வளவு யதார்த்தம். வெறுமையுடன் கூடிய தனிமை எந்தளவு கொடுமையானது என்பதற்கு, இந்தக் காட்சியை விடச் சிறந்த உதாரணம் இருக்க முடியாது. அதையும் மீறிய தனிமைகளில் கடற்கரைதான் பாதிக்கப்பட்டவர்களுக்கான வடிகாலாக இருக்கின்றது. இன்னும், ஜித்தா ஷரஃபிய்யா பகுதியும் பலதிய்யா மார்க்கெட்டும் அந்த மேம்பாலமும் பாத்திரமாகவே உலவுகின்றன நாவல் முழுக்க.

இப்படி இன்னும் அரபு நாடுகளில் பிழைப்பதற்காகப் புலம்பெயரும் முஸ்லிம் சமூகம் சார்ந்த எளிய மனிதர்களின் வாழ்வியலை அஜ்னபி மிக நேர்த்தியாகவும் உணவுர்ப்பூர்வமாகவும் காட்சிப்படுத்தியுள்ளது. குறிப்பாக இஸ்லாம் வழியே அறியப்படும் ஒழுக்கம், மனிதம் அரேபியாவில் எந்தளவிற்கு உள்ளது என்பதையும் அதன் யாதார்த்தத்தையும் உள்ளதை உள்ளபடியாகக் காட்சிப்படுத்தியுள்ளது. இதிலிருந்து அனைவரும் அறிய வேண்டியது, உலகில் எல்லா மனிதர்களுக்கும் ஏற்படும் உணர்வுகளும், அதன் வெளிப்பாடுகளும் சூழ்நிலை சார்ந்தோ அல்லது தேவையைப் பொறுத்தோ மாறும் தன்மையுடையதுதான். அதற்கு மதமும் அதன் கோட்பாடுகளும் சுத்தமாகத் தெரியாது என்பதே!.

இப்பேர்பட்ட அருமையான படைப்பை, அது பேசிய உண்மையை இன்று வரை இஸ்லாமிய சமூகம் பேசாமல் அமைதிகொள்வது, எந்தவகையில் நியாயம் என்ற கேள்வி கடல் அலைகள்போல அரித்துக் கொண்டே இருக்கின்றன. கொண்டாடவில்லை என்றாலும் அஜ்னபி நாவல் நீண்ட கலந்துரையாடலுக்கான வட்ட மேசையை அமைத்துக் கொடுத்துள்ளது என்பதை முஸ்லிம் சமூகம் உணர வேண்டும். கல்வி, கலைகள், இலக்கியம், அரசியல், சமூகத்தில் பொதுநகர்வுகள் என, முஸ்லிம்கள் தங்களை எந்தெந்த இடங்களிலெல்லாம் எப்படியாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்கான கேள்வியையும் பதிலையும் முன்னும் பின்னுமாகப் பேசியுள்ளது அஜ்னபி. வெள்ளிக்கிழமை ஜும்மா மேடைகளில் அஜ்னபியை பேசுவதற்கு ஆலிம்கள் முன்வர வேண்டும், அதன் மூலம் ஒரு பரந்துபட்ட இலக்கிய நுகர்வும். வெளிநாடு வாழ் பற்றிய புரிதலும் இச்சமூகத்துக்கு ஏற்பட வேண்டும். அதேநேரத்தில் அரேபியா என்றாலே கட்டரபிகள் என்றும், அவர்கள் மனிதத் தன்மையற்றவர்கள் எனவும் காணப்படும் நிலையும் அஜ்னபியில் மம்மலி பேசும் இந்த உரையாடல் வழியே மாற வேண்டும்.

“சதீக் யார் என்ன சொன்னாலும் நான் இந்த நாட்டை நேசிக்கிறேன். மனிதர்களில் மோசமானவர்கள் இருப்பதைப் போல இங்கும் மோசமானவர்கள் இருக்கலாம். நான் சந்தித்ததில் பலர் நல்லவர்கள், நீங்கள் சந்தித்ததில் பலர் மோசமானவர்களாக இருக்கலாம். ஒவ்வொரு மனிதர்களும் அவர் அவர் கண்கள் வழியாகத்தான் இந்த உலகத்தைப் பார்க்க முடியும். இந்த உலகம் மோசமானது அல்ல, ஒருவேளை மோசமான மனிதர்கள் நிரம்பிய உலகமாக இருக்கலாம்.” மம்மலியின் இந்தக் கருத்து அரேபியாவுக்கு மட்டுமானதல்ல உலம் முழுமைக்கும் பொதுவானது.

நாவலின் ஒவ்வொரு பகுதியும் பாத்திரங்களும் பல அடுக்குகளோடு மேலும் பல நாவல்களுக்கான கதைக் களத்துடன் விரிந்து காணப்படுகிறது. மொழியும் வட்டார எழுத்து நடையும் கதை விவரிப்பும், அஜ்னபியை திரைப்படமாகப் பார்த்த அனுபவத்தைத் தருகிறது. நாவலாகவே இப்படியென்றால், அஜ்னபி திரையில் சினிமாவாகப் பார்த்தால் எப்படி இருக்கும்!!!.

தமிழ் சினிமாவில் இதுவரை முஸ்லிம் சமூகத்தின் வாழ்வியலை எந்தப் படமும் முழுமையாகச் சித்தரித்ததில்லை. அந்த வகையில் அதனை நிவர்த்திச் செய்யும் எல்லாக் கூறுகளையும் ‘அஜ்னபி’ பெற்றுள்ளது. விரைவில் அஜ்னபி திரைப்படமாக வரும் என்ற நம்பிக்கையோடும் எதிர்ப்பார்ப்புகளோடும்..

மேல் செல்